Tuesday, July 9, 2013

டாக்டர் ராமதாசின் தலித் விரோதம்



டாக்டர் ராமதாஸ் தனது ஜாதி மக்களுக்காக ஒரு சங்கத்தையோ அல்லது ஒரு கட்சியை தொடங்கியபோது, தமிழ்நாட்டில்  யாரும் தப்பாகவோ அல்லது பெரிதாகவோ எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் நாயுடு ம்ஹாஜன சங்கம், நாடார் சங்கம், 24மனை தெலுங்கு செட்டியார் சங்கம், பிராமணர் சங்கம், தாழ்த்தப்பட்டோர் சங்கம் என்று வரிசையாக இருந்தன.

ஆனால், இப்போது டாக்டர் ராமதாசை மட்டும் எல்லோரும் ஜாதி வெறியர் என்று ஏன் சொல்லுகிறார்கள்? ஒரு கால கட்டத்தில் ஆமாம் நான் ஜாதிவெறியன்தான் “ என்று அவரும் சொல்லிக் கொண்டார். காரணம் என்ன?


ஜாதி சங்கங்கள் செய்த பொதுவான விஷயங்கள்:

பொதுவாகவே ஜாதிச் சங்கங்கள் தொடங்கும்போது தனது ஜாதி மக்களை முன்னேற்ற, பாதுகாக்கவே தொடங்கப் பட்டதாக அறிவிப்பு செய்தார்கள். தங்கள் ஜாதி ஏழைப் பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்தல், திருமண உதவி செய்தல், வருமானத்தைப் பெருக்க அறக்கட்டளை நிறுவுதல், திருமண மண்டபங்கள் கட்டுதல் என்றுதான் சேவைகள் இருந்தன. இவைகளை விளம்பரப்படுத்த இந்திய சுதந்திர தினம், தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் விழா நடத்தினர். பல ஜாதிச் சங்கங்கள் தொடங்கிய வேகத்தில், பண விவகாரத்தால்  உட்கட்சி பூசலால் முடங்கிப் போயின.

ஒவ்வொரு ஜாதி சங்கத்தினரும் தங்கள் எல்லையை உணர்ந்து செயல்பட்டனர். தங்கள் வளர்ச்சிக்காக மற்ற ஜாதியினரை தாக்கவோ அழிக்கவோ நினைக்கவில்லை. சின்னச் சின்ன
ஊர்ப் பிரச்சினைகளுக்கு எல்லாம் வர்ணம் தீட்டவில்லை.

ராமதாசின் அரசியல் பாதை:

மற்ற ஜாதிச் சங்கங்களைப் போலவே ராமதாசும் ஆரம்பத்தில் தனது வன்னியர் சங்கத்தையும் தொடங்கி நடத்தினார். ஒருசமயம் போராட்டத்தின் போது, வட மாவட்டங்களில் சாலைகளின் ஓரத்தில் இருந்த மரங்களை வெட்டி குறுக்கே போட்டு ஸ்தம்பிக்கச் செய்தபோது, தமிழ்நாடு அரசு, காவல்துறை, பொதுமக்கள் என்று அனைவரது பார்வையும் டாக்டர் ராமதாஸ் மீது விழுந்தது. “மரம்வெட்டி என்ற பெயர் வந்தது. அதன்பிறகு தனது பாதுகாப்பிற்காக அரசியல்வாதியென்ற முகமூடியை அணிந்து பாட்டாளி மக்கள் கட்சிஎன்று வன்னியர் சங்கத்தின் பெயரை மாற்றினார். கட்சியின் செயல்பாடுகள் ஒரு ஜாதிச் சங்கத்தின் அடிப்படையிலேயே இருந்தன. ஆனால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு தலித் விரோத போக்கையே கடைபிடித்தார். பொதுத் தேர்தலில் மற்ற கட்சிகளோடு கூட்டணி வைக்கும்போது , இந்தமுறை சரிப்பட்டு வராது என்பதற்காக தலித்துகளோடு சமாதானம் செய்து கொண்டார். இதற்கு தேர்தலில் விடுதலை சிறுத்தைகளோடு கூட்டணி ( உள்ளே பகை; உதட்டில் உறவு) வைத்துக் கொண்டார். 


அரசியலில் வெற்றி தோல்வி:

அரசியலில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரும். ஒருசமயம் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத ஆலமரமாக இருந்த காங்கிரஸ் திமுகவால் சாய்க்கபபட்டது. திமுக உடைந்த பிறகு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக அல்லது அஇஅதிமுக தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. எம்ஜிஆர் இருக்கும்வரை கருணாநிதி கட்சியை நடத்த கடும் போராட்டங்களச் சந்திக்க வேண்டி இருந்தது. திமுகவை கலைத்து விடவில்லை. அதன்பிறகு கருணாநிதி ஜெயலலிதா என்று அரசியல் தொடர்ந்தது. ஆட்சியில் இல்லாத காலத்தில் இவர்களில் யாரும் கட்சியை கலைத்துவிட்டு ஓடிவிடவில்லை.

ராமதாசின் ஆயுதம்:

எந்த திராவிடகட்சி ஜெயிக்கிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.. ஆனாலும் ராமதாசின் வாய் சும்மா இருக்கவில்லை. இரண்டு திராவிட கட்சித் தலைவர்களையும் ஒன்று உச்சியில் வைத்து புகழ்வது அல்லது ரொம்பவும் மோசமாக தரங்கெட்டு விமர்சிப்பது என்று இருந்ததால் ஒருசமயம் , எந்த கூட்டணியிலும் சேர்க்கப்படாமல் கடும் தோல்வியைச் சந்தித்தார்.  அறக்கட்டளை, குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி போன்ற விஷயங்கள், மேலும் மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை (இந்தூர் மருத்துவக் கல்லூரி விவகாரம் CBI விசாரணக்கு வந்தது.) போன்ற விஷயங்கள் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இவரது கட்சியில் இருந்த பேராசிரியர் தீரன், பண்ருட்டி ராமச்சந்திரன், வேல்முருகன் போன்றோர் இப்போது இல்லை. தான் தொடங்கிய கட்சி தன் காலத்திலேயே சரிவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதற்கு அவர் எடுத்த ஆயுதம்தான் தலித் மக்களுக்கு எதிரான அவதூறு,  அசிங்கப்படுத்துதல் மற்றும் மற்ற ஜாதிக்காரர்களை அவர்களுக்கு எதிராக ஒன்று சேர்த்தல்.


திவ்யா இளவரசன் காதல் விவகாரம்:

ஒரு ஆணும் பெண்ணும் காதல் செய்தனர், கல்யாணம் செய்து கொண்டனர். இருவருமே தமிழர்கள். ஆனால் இருவேறு ஜாதியினர். இந்தக் காதல் இவ்வளவு நெருக்கமாக வந்ததற்குக்  காரணமே இருவரது அப்பாக்களும் நண்பர்களாக இருந்ததுதான். இது அவர்கள் இருவரது குடும்பத்தோடு முடிந்துபோக வேண்டிய விஷயம். நாட்டில் இது போன்ற காதல் திருமணங்கள் நடக்காமல் இல்லை. நாடகக் காதல் என்றால் ஒரு பெண் எப்போதோ உதறி இருப்பாள். எத்தனையோ விவாகரத்து வழக்குகள் சொந்த ஜாதிக்குள்ளேயே நடைபெறுகின்றன. அவற்றை தீர்க்க முன்வராத டாக்டர் ராமதாஸ், தனது அரசியல் வளர்ச்சிக்காக ஒரு கட்டை பஞ்சாயத்து தலைவரைப்போல, இதில் மூக்கை நுழைத்து.  இந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டார். இதனால் திவ்யா இளவரசன் காதல் பெரிதாக பேசப்பட்டது. அவர் தனது ஜாதிக்காக போராடட்டும். வேண்டாம் என்று  யாரும் சொல்லவில்லை. ஆனால் ஒரு காதல் திருமணத்தை ( ஒரு பஞ்சாயத்திலேயே முடிந்த விவகாரம் )  முன்னிட்டு, தலித்துகள் அனைவருமே விரோதி என்று அவர்கள் மீது  தாக்குதல் நடத்துவது, கேவலமாக பேசுவது எந்தவிதத்தில் நியாயம்? 


ஆனால் இது அரசியல் ரீதியாக டாக்டர் ராமதாசுக்கு ஒரு சறுக்கு ஆகும். இதுவரை இவரை ஆதரித்த அரசியல்வாதிகளின் நட்பையும் மற்ற ஜாதி மக்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டார் என்பதே உண்மை. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ற வரிசையில் வர வேண்டிய ஒருவர் ஜாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் “ குடுவைக்குள் அடைக்கப்பட்ட பூதம்“ போல் மாறி விட்டார். தனது அரசியல் வாரிசான தன்மகன் அன்புமணியையும் தவறான பாதையில் கொண்டு சென்று விட்டார். கலைஞர் கருணாநிதியிடமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும், டாக்டர் ராமதாஸ் கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் விஷயங்கள் நிறைய இருக்கின்றன.